Monday, May 17, 2010

முதுமையில் வாடும் ஒரு இளைஞன்


FM அஸ்லம்
(ரஜரட்டை மருத்துவபீடம்)
aslamaumsa@gmail.com

‘உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அழ்ழாஹ்வுடையது.’ (அல்குர்ஆன் 16:53)

கடந்த மாதம் அநுராதபுர போதனா வைத்தியசாலையின் 118ம் இலக்க பொது நோயியல் மருத்துவ விடுதியில் 24 வயது நிரம்பிய ஊர்காவற்படை வீரர் ஒருவர் தனது உடல் முழுவதும் தூக்க மயக்கமாகவும், களைப்பாகவும் இருப்பதுடன் உடல் முழுவதும் நோயிருப்பதாகவும் கூறி அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இவரை மேலதிக பரிசோதனைக் குட்படுத்திய போது கண், முண்டம் போன்றவை வீங்கியிருப்பதுடன் கண்புருவ மயிர்கள் உதிர்ந்தும் கையில் உள்ள தசைகள் விறைத்துப் போய் பலவீனமுற்று குரல் சத்தமும் தடிப்படைந்து உடல் தளர்ச்சியாகவும் காணப்பட்டது.

மேலும் இந்த இளைஞனின் தெறிவினைகள் தாமதாமாகி நிகழ்வதுடன் (Slow replacing reflex) இதயத்துடிப்பும் குறைவடைந்திருந்தது. இவ்வாறான அறிகுறிகள் கழுத்தில் குரல்வளைக்கு முன்புறமாக அமைந்துள்ள இரு சிறகுகளையும் விரித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணாத்துப் பூச்சியின் அமைப்பை ஒத்த தைரொயிட் சுரப்பியினால் சுரக்கப்படும் தைரொக்ஸின் ஓமோனின் அளவு குறையும் போது தோன்றுவதால் இந்த ஓமோன் குருதியில் குறைவடைந்திருக்கலாம். ஏன சந்தேகிக்கப்பட்டு நிரூபிப்பதற்காக இந்த இளைஞனின் குருதி எடுக்கப்பட்டு அதில் உள்ள தைரொக்ஸின் ஓமோனின் அளவு கணிக்கப்பட்டது. இது சாதாரண சுகதேகியின் குருதியில் உள்ள அளவிலும் பார்க்க குறைவாகக் காணப்பட்டது.

உடலில் தைரொக்ஸின் ஓமோன் சுரத்தலானது மூன்று சுரப்பிகள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தொடரான பொறிமுறையினூடாக நிகழ்கின்றது. அதாவது மூளையத்தில் அமைந்துள்ள பரிவகக்கீழ் எனும் சுரப்பியினால் முதலில் தைரொக்ஸின் விடுவிக்கும் ஓமோன் சுரக்கப்பட்டு இந்த ஓமோனானது குருதி மூலம் விடுவிக்கப்பட்ட தைரொயிட் சுரப்பியைத்தூண்டி தைரொக்ஸின் ஓமோனைச் சுரக்கச் செய்கின்றது. ஆகவே, இம்மூன்று சுரப்பிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் பாதிப்புக்கள் தைரொக்ஸின் சுரத்தலைப் பாதிக்கின்றது.

மேலும் இந்த இளைஞனுக்கு எந்தச் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காக இவருடைய தலையை CT Scan எடுத்து அவதானித்தபோது கபச்சுரப்பியில் ஒரு சிறிய கட்டியொன்று தோன்றி வளர்ந்து வருவது அவதானிக்கப்பட்டது. அதாவது கபச்சுரப்பியில் தோன்றியிருக்கும் இந்தக்கட்டி TSHச் சுரக்கும் கலங்களை நசுக்கி TSH சுரத்தலைக் குறைத்திருப்பதால் தைரொயிட் சுரப்பியைத் தூண்டுதல் குறைந்து தைரொக்ஸின் சுரத்தலைக் குறைத் திருக்கின்றது.

மேலும் இந்தக்கட்டி வளர்ந்து கொண்டு செல்லும் போது கபச்சுரப்பியால் சுரக்கப்படும் மற்றைய மிக முக்கியமான 5 ஓமோன்களின் சுரத்தலும் பாதிக்கப்படுவதால் வளர்ச்சி குன்றுதல், பெண்களின் பால் குறைவடைதல், மலட்டுத் தன்மை உருவாதல், உடல் நிறை குறைவடைதல், குருதிக் குளுக்கோஸில் அயன்களின் நிலை பாதிப்படைதல், போன்ற மற்றும் பல பிரச்சனைகளையும் தோற்றுவிக்கும். இக்கபச் சுரப்பியானது இரண்டு பக்கங்களிலிருந்து வரும் பார்வை நரம்புகள் குறுக்கிடும் இடத்துக்கு சராசரியாக சற்று மேலாக காணப்படுவதால் அதுவும் நசுக்கப்பட்டு இருபக்கமும் பக்க கண்களால் உள்ள பொருட்களை பார்க்க முடியாமல் ஆகிவிடும்.

தைரொக்ஸின் ஓமோனானது மூளை வளர்ச்சிக்கு அவசியமாகையால் இதன் குறைபாடு மந்த புத்தி, மதிமயக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. மேலும் தைரொக்ஸின் ஓமோனானது உடலின் வெப்ப வீதத்தைக் கூட்டி உருவாக்குவதன் மூலம் குளிர் காலங்களிலும் உடல் வெப்ப நிலை மாறுபடாமல் பேணி உடலிலுள்ள புரதங்கள், கலங்கள் அழிவடைவதைத் தடுக்கின்றது. இதனால் தைரொக்ஸின் குறைபாடுள்ளவர்கள் குளிர் காலங்களில் அல்லது குளிர்பிரதேசங்களில் வாழ முடியாமல் அவதியுறுகின்றார்கள்.

கபச்சுரப்பியால் பாதிப்பேற்படாமல் வேறு வழிகளில் தைரொக்ஸின் ஓமோன் குறைவடையும் போது இந்தக் குறைவானது எதிர் பின்னூட்டல் பொறிமுறை மூலம் கபச்சுரப்பியைத் தூண்டி அதிகளவு TSHஐச் சுரக்கச்செய்கின்றது. இந்த அதிகரித்த TSH ஆனது தைரொயிட் சுரப்பியைத் தூண்டி அதிகளவு வளர்ச்சி யடையச் செய்வதால் இச்சுரப்பியானது பருமனில் பெரிதாகி கழுத்தில் ஒரு பெரிய கட்டி இருப்பது போன்று தோற்றமளிக்கும். இது கண்டமாலை என அழைக்கப் படுகின்றது.


இச்சுரப்பியானது இவர்களின் சமூக வாழ்கையை பெரிதும் பாதிக்கின்றது. இதற்கு நிவாரணமாக இச்சுப்பியை வெட்டி அகற்றிவிட்டு பின்னர் மிருகங்களில் பெறப்பட்டு சந்தையில் விற்பனையாகின்ற தைரொக்ஸின் மாத்திரைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாழ்நாள் பூராக உட்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாத்திரைகள் வயோதிபர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்களில் மிக மோசமான பக்க விளைவு களையும் ஏற்படுத்துகின்றது. இச்சுரப்பியை வெட்டி அகற்றும் இச்சத்திர சிகிச்சையானது மிகவும் அபாயகரமானது. ஏனெனில், இச்சத்திர சிகிச்சையின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படுவதால் இச்சுரப்பியை மருவிக் கொண்டு குரல் வளைக்குச் செல்லும் நரம்புகள் தவறுதலாக வெட்டப்பட்டுவிடலாம். இதனால் நன்கு பேசிக்கொண்டிருந்த நோயாளி சத்திரசிகிச்சையின் பின்னர் கதைக்க முடியாமல் கூட ஆகிவிடும்.

மற்றும், இதன்போது தைரொக்ஸின் சுரப்பியின் நான்கு மூலைகளிலும் நான்கு பட்டன்கள் போல் அமைந்துள்ள புடைக்கேடையப் போலிச்சுரப்பியும் வெட்டி அகற்றப்பட்டுவிடக்கூடும். இவ்வாறு அகற்றப்படுமெனில் இச்சுரப்பியால் சுரக்கப்படும் ஓமோன் உடலில் அற்றுப்போவதால் கல்சியம் குறைவடைந்து வலிப்பு, கைவீக்கம் மற்றும் தசைச்சுருக்கம் என்பன ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்பங்களில் தைரொக்ஸினுடன் சேர்த்து கல்சியமும் வாழ்நாள் முழுவதும் கொடுக்கப்படவேண்டும்.

பகல் காலங்களில் வயலில் வேலை செய்தும், இரவில் ஊர்காவற்படை வீரராகவும் பணி புரிந்து உழைத்து, தனது வயதான அம்மாவையும் பரிபாலித்து வாழ்ந்து வந்த இந்த இளைஞனுக்கு திடீரென எந்த வேலையும் செய்ய முடியாமலும், துப்பாக்கியைக்கூட தூக்கி நடக்க முடியாமலும், வேறு எந்த தொழிலும் செய்ய முடியாமலும் அல்லலுறும் காட்சி அதிர்ச்சியானது. அதாவது எந்த அளவுக்கு எனில் தனது தாய்க்கு உதவிசெய்ய வேண்டிய இந்த இளைஞனுக்கு அவனுடைய வயதான தாய் அவனுக்கு உதவி செய்யும் நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போமெனில் பிறவியில் எந்த ஊனமும் இன்றிப் பிறந்த இந்த இளைஞன் இளமைப் பருவத்தை யடைந்து இளமையின் சுகபோகங்கள் அனைத்தையும் நுகர்ந்து கொண்டிருந்த இந்த இளைஞனுக்கு திடீரென ஏற்பட்ட இந்த வயோதிப பன்புகள் அழ்ழாஹ் உடலின் ஆட்சியாளன் என்பதையும் எந்த நேரத்திலும் எதையுமே செய்துமுடிக்கப் போதுமானவன் என்பதையும் உணர்த்துகின்றதல்லவா?

‘மனிதனுக்கு நாம் அருளை அனுபவிக்கச்செய்து பின்னர் அவர்களிடமிருந்து அதை எடுத்துவிட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நம்மை மறுப்போனாகவும் மாறிவிடுகின்றான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் என்னை விட்டும் தீங்குகள் அகன்றுவிட்டன. என்று கூறுகின்றான். அவன் பெருமிதமும் கர்வமும் கொள்கின்றான்.’ (அல்குர்ஆன் 11:09)

பணம் மற்றும் பதவி படைத்தவர்கள் நான் கஷ்டப்பட்டு உழைத்ததாலும், கண்விழித்துப் படித்ததாலும் மற்றும் எனது திறமையினாலும்தான் இன்று நான் இந்த நிலைமையில் இருக்கின்றேன் என்று அழ்ழாஹ்வை மறந்து மார்தட்டிக் கொள்கின்றார்களே. இவர்கள் சிந்திக்கவேண்டாமா? இவர்களின் தைரொக்ஸின் ஓமோன்களைக் குறைத்து மந்தபுத்தி யுடையவர்களாகவும், சோம்பேறிகளாகவும், கழுத்தில் பெரிய கட்டியுடனும் வீட்டில் முடக்கி வைக்கப் போதுமான அழ்ழாஹ்வையும் மற்றும் அவனது ஆற்றல்களையும் சிந்திக்கவேண்டும்.

‘தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பிவிடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்துவிட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.’ (அல்குர்ஆன்-18:28)

அன்றாடம் தொழில் செய்து சுறுசுறுப்பாக அவர்களின் காரியங்களை முடித்துக் கொண்டு குடும்பங்களை நடாத்துகின்றவர்களும் இன்று தன்னை விட பணம், பதவியால் உயர்ந்தவனைப் பார்த்து இவரைப் போல் என்னையும் ஆக்கியிருக்கக்கூடாதா? என்று இறைவனைக் கடிந்து கொள்வதும் உண்டு. இவர்களுக்கு வழங்கியிருக்கும் ஆரோக்கியம் எனும் அருட்கொடையையும் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும் ஏன் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் அவதிப்படும் இந்த இளைஞனின் நிலைமையைக் கூட இவர்கள் சிந்திக்கவேண்டாமா?

எம்மை சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழவைத்து உணவளித்துக் கொண்டிருக்கின்ற அழ்ழாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதுடன் அவனது அருட்கொடைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் பயன்படுத்தி நற்பேறு பெறுவோமாக.


நன்றி : http://dharulathar.com

No comments:

Post a Comment