Wednesday, May 19, 2010

நீல நிற இரத்தம் பம்பும் இதயமொன்று…



by:FM அஸ்லம் (ரஜரட்டை மருத்துவபீடம்) aslamaumsa@gmail.com

‘எவர் ஆத்மாவாகிய அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர் திட்டமாக வெற்றி பெற்றுவிட்டார்.’ (அல்குர்ஆன் 91:9)


மார்ச் மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை காலை அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டடுள்ள குழந்தைகளை பரிசீலித்துக்கொண்டு செல்லும் போதுஇ 12ம் இலக்கக் கட்டிலில் ஏழு மாதம் நிரம்பிய அழகான பெண் குழந்தையொன்று உழைத்துக் களைத்த மனிதன் உறங்குவது போன்று உறங்கிக்கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் இரு உதடுகளும் மற்றும் கால்இ கைகளிலுள்ள நகங்களும் நீல நிறச்சாயம் பூசி அலங்கரிக்கப்பட்டிருப்பது போன்று நீல நிறமாக மாறியிருந்தது.

அருகில் இருந்த தாயிடம் குழந்தையின் நோய் பற்றி வினவிய போது கடந்த சில தினங்களாக முன்னரை விட கடுமையாக குழந்தை சோர்வடைந் திருப்பதாகவும் பால் குடிக்க முடியாமல் திணறி அழுவதாகவும் மற்றும் அழும்

போது உடல் முழுவதும் நீல நிறமாக மாறுவதாகவும் கூறியபடி குழந்தையின் தலையணைக்குக்கீழ் இருந்து 2 கொப்பிகளையும் எழுதப்பட்ட சில தாள்களையும் எடுத்து நீட்டி குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும் அதற்காக குழந்தையை இரு மாதத்திற்கு ஒரு முறை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்குக்காக அழைத்துச் செல்வதாகவும் கடைசியாக சென்ற கிளினிக்கில் குழந்தைக்கிருக்கும் நோயை சத்திர சிகிச்சை செய்து மாத்திரமே குணப்படுத்த முடியும் எனவும் பெரிய வைத்தியர் கூறிவிட்டார் என்று முற்றாக கூறி வார்த்தைகள் வராமல் விம்மலுடன் முடித்தார்.

கருவாக இருந்த காலத்தில் இக்குழந்தையின் இதயம் விருத்தியடையும் போது ஏற்பட்ட ஒரு சிறு விபத்தினால் சாதாரண இதயத்தின் அமைப்பில் நின்றும் வேறுபட்ட பல குறைபாடுகளுடன் கூடிய இவ்விதயத்தினால் இக்குழந்தையின் உயிருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அலசுவதற்கு முன்னர் சாதாரண இதயம் எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டிருக்கிறது மற்றும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என்று முதலில் நோக்குவோம்.

சாதாரண ஒரு மனித இதயத்தின் அமைப்பை நோக்கும் போது அது மேற்புறமாக இரண்டு சோனை யறைகளும் கீழ்புறமாக இரண்டு இதயவறைகளுமாக நான்கு அறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு சோனையறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புறாத வகையில் சோனையறை பிரிசுவரால் இதயவறைகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே பக்கமாக அமைந்துள்ள இதயவறைகளும் சோனையறைகளும் கதவு போன்று திறந்து மூடக்கூடிய வால்பு மூலம் தொடர்புருகின்றன.

வலது சோனையறையினுள் மேற்பெருநாளம் கீழ்பெருநாளம் எனும் இரு பெரிய நாளங்களும் இடது சோனையறையினுள் நான்கு சுவாசப்பை நாளங்களும் திறக்கின்றன. மற்றும் வலது இதயவறையிலிருந்து ஒரு சுவாசப்பை நாடி உதித்து இரண்டாகப் பிரிந்து இரண்டு சுவாசப் பைகளையும் சென்றடைகின்றது. அதேபோல் இடது இதயவறையில் இருந்து தொகுதிப் பெருநாடி எனும் ஒரு பெரிய நாடி உதித்து அதிலிருந்து பல வகையான கிளை நாடிகள் தோன்றி தலை கை கால் உட்பட உடலின் எல்லாப் பாகங்களுக்கும் குருதியை வினியோகிப்பதற்காக சென்றடைகின்றது.

உடலின் மேற்பகுதியால் பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி மேற்பெருநாளத்தினூடாகவும் உடலின் கீழ்பகுதியால் பயன்படுத்தப்படு ஒட்சிசன் குறைவான நிலையில் உள்ள குருதி கீழ்பெருநாளத்தினூடாகவும் வலது சோனையறையினுள் ஊற்றப்படுகின்றது. பின்னர் வலது சோனையறை சுருங்கும் போது அதற்குள் வந்தடைந்த குருதி முழுவதும் வால்பின் உதவியினூடாக வலது இதயவறைக்குள் மாற்றப்பட்டு பின்னர் வலது இதயவறை சுருங்கும் போது அங்கிருந்து குருதியானது சுவாசப்பை நாடியினூடாக சுவாசப்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாம் சுவாசிப்பதன் மூலம் வளிமண்டலத்திலிருந்து உள்ளெடுக்கப்பட்டு சுவாசப்பையை (நுரையீரலை) அடையும் ஒட்சிசனில் கரைக்கப்பட்டு விளைவாகும் ஒட்சியேற்றப்பட்ட குருதி சுவாசப்பையிலிருந்து நான்கு சுவாசப்பை நாளங்களுடாக இடது சோனையறையை அடைந்து அங்கிருந்ந பின்னர் வால்பினுடாக இடது இதயவறையை அடைகின்றது.

ஒட்சியேற்றப்பட்ட குருதி இடது இதயவறையை வந்தடைந்த பின்னர் அது சுருங்க ஆரம்பித்து சுருங்கும் போது தொகுதிப் பெருநாடியினூடாக அவ் ஒட்சியேற்றப்பட்ட குருதி உடலின் எல்லாப்பாகங்களுக்கும் சென்றடைவதால் உடலில் உள்ள 60 ரில்லியனுக்கும் மேற்பட்ட கலங்களும் இவ் ஒட்சிசனைப் பயன்படுத்தி சக்தியை உருவாக்குவதன் மூலம் எம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

இதனால் தான் விபத்துக்கள் மற்றும் பல காரணங்களாள் சுயநினைவிழந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சுவாசப் பாதையில் ஏதாவது அடைப்புகள் ஏற்பட்டு சுவாசம் தடைப்படுகின்றதா? மற்றும் சுவாசம் ஒழுங்காக நடைபெறுகின்றதா? என்பனவே முதன்முதலாக பரீட்சிக்கப்படும் அளவுக்கு ஒட்சிசன் தேவையானது உடலுக்கு மிக இன்றியமையாததாகும்.

முளையமானது கருப்பையில் உட்பதிக்கப்பட்டு நான்கு வாரங்களின் பின்னர் நிகழும் மடாதல் எனும் செயற்பாட்டின் மூலம் இதயம் விருத்தியடையத் தொடங்கும். இதன் போது இரண்டு இதயவறைகளையும் பிரித்து உருவாகும் இதயவறைப் பிரிசுவரின் மேற்பகுதி சற்று முன்பின்னாக்கி விலகுவதால் இதயவறைகள் முற்றாக பிரிக்கப்படாமலும் தொகுதிப்பெருநாடி வலது சோனையறைக்குள் உட்செல்லும்.

சுவாசப் பைநாடி சற்று நெருக்கப்பட்டு அதன் விட்டம் குறைவடைந்தும் மற்றும் விட்டம் குறைவடைந்து காணப்படும் நாடியினூடாக குருதியை பம்புவதற்கு அதிக விசையைப் பிரயோகிப்பதற்காக வலது இதயவறை சற்றுத் தடித்தும் பெரிதாகியும் காணப்படும்.

கிரேக்கத்தில் நான்கைக் குறிப்பதற்காக Tetra எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான் சாதாரண இதயத்தில் இருந்தும் வேறுபட்ட மேற்கூறப்பட்ட நான்கு குறைபாட்டைக் கொண்ட இவ்விதயத்திற்கு Tetrology of fallot எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான குறைபாட்டினால் வலது இதயவறையை வந்தடையும் ஒட்சியேற்றப்படாத குருதியின் ஒரு பகுதி வலது இதயவறை சுருங்கும் போது சுவாசப்பைக்குச் சென்று ஒட்சியேற்றப்படாமலேயே வலது இதயவறையினுல் உட்புகுந்து காணப்படும் தொகுதிப் பெருநாடியினூடாக செல்வதனால் ஒட்சிசன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் உடற்கலங்களுக்கு தாகம் தீர்க்க முடியாமல் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

இவ்வாறான ஒட்சிசன் தட்டுப்பாட்டினால் ஏழு மாதமாகியும் இன்னும் சுயமாக இருக்க முடியாதளவுக்கு இக்குழந்தையின் வளர்ச்சி குறைவடைந்திருப்பதுடன் மேலும் இக்குழந்தை வளரும் போது அதிகளவு ஒட்சிசன் தேவைப்படுவதாலும் இத்தேவைக்கேற்ப ஒட்சிசன் வழங்க முடியாமல் இதயம் திணறுவதால் பூப்படைதல் உட்பட குழந்தையின் எல்லா வளர்ச்சி கட்டங்களும் தாமதமாகியே நடைபெறும்.

மற்றும் இவ்வாறான குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது தொடர்ச்சியாக விளையாட முடியாமல் உடல் முழுவதும் நீல நிறமாகி இடைநடுவிலேயே ஓரமாகி ஓய்வெடுத்துக் கொள்ளும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்குழந்தையை முகங்குப்பற படுக்கப் (Knee – Chest position)போடுவதன் மூலம் பகுதியான சிறிதளவு நிவாரணமும் கிடைக்கின்றது.

இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக தொடையிலிருந்து ஒரு நாளம் வெட்டி எடுக்கப்பட்டு அதனால் சுவாசப்பை நாடியும் தொகுதிப் பெருநாடியும் இணைக்கப்பட்டு அவற்றிற்கிடையே தொடர்பு ஏற்படுத்தப் படுகின்றது. இதனால் தொகுதிப் பெருநாடியினூடாக செல்லும் ஒட்சிசன் அகற்றப்பட்ட குருதி சுவாசப்பை நாடியினுல் மாற்றப்பட்டு சுவாசப்பை நாடியினூடாக சுவாசப் பையினுல் எடுக்கப்பட்டு ஒட்சியேற்றி அனுப்பபடும் இச்சத்திர சிகிச்சை Blalock – Taussig Shunt என அழைக்கப்படுகிறது.

பல இலட்சங்கள் செலவு செய்து செய்யப்படும் இச்சத்திர சிகிச்சையின் போது துரதிஷ்டவசமாக இதயத்துடன் மருவிச் செல்லும் நரம்புகள் (Phrenic nerve) இதயச் சுவாசத்துக்கான சமிக்ஞைத் தொகுதி (conducting systerm) என்பன சத்திர சிகிச்சை நிபுணரின் (surgeon) கத்தியில் அகப்படும் போது மரணம் கூட சம்பவிக்கக் கூடும்.

பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகள் இவ்வாறான குறைபாட்டுடன் பிறப்பதாகவும் அந்தப்பத்துக்குள் எம்மையும் உள்ளடக்காமல் எந்தக் குறையுமின்றி வடிவத்தில் அழகாக அமைத்திருந்தும் இன்று நாம் அதை பொறாமை பெருமை தலக்கணம் ஆணவம் போன்றவைகள் குடியிருக்குமிடமாக மாற்றி எம்மிதயத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்.

‘அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.’ (அல்குர்ஆன்- 91:9)

‘உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்துகொள்ளுங் கள் அதுதான் இதயம். என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

‘(அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-52)

இறைவன் ஒரு விடயத்தை கூறுவதற்கு சத்தியம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எனினும் ஸூரத்துல் ஸம்ஸ் எனும் அத்தியாயத்தில் 7 சத்தியங்கள் செய்து விட்டு அதற்கடுத்ததாக மேலேயுள்ள வசனத்தை கூறுகின்றானெனில் அவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைந்துள்ளது.

இங்கு கூறப்பட்டிருக்கும் உளப்பரிசுத்ததின் முக்கியத்துவத்தை இன்று எம்மில் பெரும்பாலான வணக்கவாளிகள் கூட கவனத்தில் கொள்ளாமல் அமல்கள் மாத்திரமே எம்மை சுவனம் கொண்டு செல்ல போதுமானது என்ற போர்வையில் உளப்பரிசுத்தம் எனும் பெரும்பகுதியே கவனத்திற் கொள்ளமல் அதைக் கலங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு சிறந்த ஒரு சான்றாக நபி (ஸல்) அவர்கள் எல்லாவற்றின் மீதும் நல்லெண்ணம் வைத்த சாதாரண ஒரு வணக்கவாளியை சுவர்க்கவாசி என அடையாளப் படுத்தியதுடன் அவர்களும் உளத் தூய்மையை வேண்டி அதிகமதிகம் ஒவ்வொரு தொழுகையிலும் பின்வருமாறு பிரார்திப்பார்கள்.

‘நீயே உள்ளங்களின் தலைவனாகவும் அதனை தூய்மைப்படுத்துபவனாகவும் இருக்கின்றாய். எனது உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக’ (ஸஹிஹுல் புஹாரி)

இன்று எமது உள்ளங்கள் எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும் அடுத்தவரை இழிவாகக் கருதுவதும் அடுத்தவர் மீது தப்பெண்ணம் கொள்வதும் அடுத்தவர்களின் வெற்றியை நமது தோல்வியாகவும் அடுத்தவரின் தோல்வியை தமது வெற்றியாகவும் கருதி நல்லதை நினைப்பதை விட்டும் திசைதிருப்பப்பட்ட உள்ளங்களாக மாறியிருக்கிறது.

இறைவா எங்கள் இதயத்தை அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் எந்தக் குறையுமின்றி அமைத்த நீயே அதைத் தூய்மைப்படுத்தக் கூடியவனாகவும் இருக் கின்றாய் ஆகையால் எங்களுடைய இதயங்களையும் தூய்மைப்பபடுத்தி அதனை செயற்பாட்டு ரீதியில் அசுத்தப்படுத்தும் கூட்டத் திலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருள்வானாக!

நன்றி : http://dharulathar.com